பறவாயில்லை முகமூடியோடையே வரலாம் வாங்கோ...! நான் வாசித்தவை, யோசித்தவை, நினைவுகள், நிஜங்கள் என்பவற்றோடு..உங்கள் கருத்துக்களும் இங்கு தூறல்களாக...

Thursday 5 July 2007

"ஹலோ, ஆர் யூ ரமிழ்?"

"ஹலோ, ஆர் யூ ரமிழ்?"

பின்னால இருந்து வந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தன். அதே தமிழ் ஆண்டி பொட்டு வைச்சு, நம்ம ஊரில் தலை பின்னுவது போல பின்னிக்கட்டி, கையில 2 உடுப்போட நிண்டா. " நே" எண்டு அவா இங்கிலீசில கேட்ட கேள்விக்கு டச்சில "இல்லை" எண்டு பொருத்தமில்லாம பதிலை சொல்லிட்டு சட்டெண்டு முன்னுக்கு திரும்பிட்டன். பொய் சொல்லேக்கையும் பொருத்தமா சொல்லணும் எண்டுவாங்க. அது பேசி வைச்ச பொய் அதைதான் பொருத்தமா சொல்லணும். இது திடீரெண்டு நினைச்சு வைக்காம சொன்ன பொய். சரி பொய் பொய் தானே இதில பிறகென்ன நியாயப்படுத்த வேண்டி இருக்கு எண்டு நெச்சன். திரும்பியே பாக்காமல் எனது நேரம் வர காசை குடுத்து உடுப்பையும் எடுத்துக்கொண்டு நண்பிகளோட அந்த ஆண்டி பக்கமே பாக்காம ஓடி வந்தன். என்னவோ மனசுக்க நெருடலா இருந்திச்சு. யேசுவை இராயப்பர் மூன்று முறை மறுதலித்தது ஞாபகம் வந்திச்சு. நண்பிகள் வழியில வரேக்க ஒரே நக்கல் அடிச்சாங்க. அவர்கள் தங்கள் வழியில் போக பஸ்ஸில ஏறி கறுத்து போகாம இருக்க சூரியனுக்கு எதிர் பக்கமா உள்ள சீட்டில யன்னல் ஓரமா போய் இருந்தன்.

நான் என்ன வேணுமெண்டா பொய் சொன்னன்? அந்த ஆண்டியோட அவவோட ஹஸ்பண்டும் வந்திருந்தார். அவரை எங்கயோ பிறந்த நாளில அப்பாவோட கதைக்க கண்ட ஞாபகம். இப்போ கொலிஜில பாடம் இல்லாத நேரம் சூரினாம் பிரெண்டுகளோட கடைக்கு வந்திருக்கன். இவர் கண்டு அப்பாக்கு சொன்னால் சரி, கிழிஞ்சுது. இல்லை எண்டால் " அங்க அவரோட மகள் வெளிநாட்டு பெட்டையளோட ஊர் சுத்துது" எண்டு இவர் டெலிபோனில சொல்ல. அங்கால மற்றாளுக்கு அது " பெடியங்களோட" எண்டு கேட்க..பிறகு கதை கறுப்பு கறுப்பா வாந்தி எடுத்த விசயம் காகம் காகமா வந்தி எடுத்தது எண்டு திரிபடைஞ்சது போல ஆயிடும். அந்த பயத்தில தானே கடைக்குள்ள போகேக்கையே அவையை கண்டுட்டு நெத்தியில இருந்த குட்டி பொட்டையும் எடுத்து புறங்கையில் ஒட்டிப்போட்டு அவை கண்ணில படாமல் நிண்டன். இருந்தும் கண்டுட்டாவே. சரி இல்லை எண்டு சொன்னாலும் முகம் காட்டி இருக்குமோ?? சீ..சூரினாம் ப்ரெண்டுகள்..அவையும் தமிழ் ஆக்கள் போல தானே கலர். அதனால என்னையும் அவை எண்டு நெச்சிருப்பா என்ன..?
இப்படி பல யோசனைகளோட வீடு போய் சேர்ந்தன். போனதும் முதல் வேலை அம்மாக்கு விசயத்தை சொன்னது தான். ஆனால் அம்மா
" நீ போனது பிழை தானே? சொல்லாம எப்பிடி போவா நீ?" எண்டு கேட்டா.
" அம்மா எனக்கு எத்தினை வயசு சொல்லுங்கோ. என்னை விட வயசு குறைஞ்சதுகள் எல்லாம் எவ்வளவு செய்யுதுகள். பெடியங்களோட அது இதெண்டு சுத்துதுகள். சும்மா உதில பிரெண்டுகளோட போனது பிழையே?" எண்டு நான் வாதாடினன்.
" நீ போனது பிழை இல்லை. சொல்லாம போனது தான் பிழையடி!"
"அப்பாட்ட இப்ப சொல்ல. அப்பா உடனே ஓம் எண்டுவரோ. அதோட நான் பிளான் பண்ணி போகலம்மா. பிரீ பாடம் அதுவும் 3 பாடம். எவ்ளோ நேரம் கொலிஜ்க்கயே இருக்கிறது. அதுதான் போனான். சரி இனி இப்பிடி போகல. இண்டைக்குத்தான் கடைசி!"
எண்டு வாதாட்டத்தை பெரிசாக்காமல் முடிச்சுட்டு சரி அம்மாட்ட சொல்லிட்டன் தானே எண்ட ஆறுதலோட இருந்தன்.

கொஞ்ச நாளால கொலிஜ் போகாமல் ட்றெயினிங் போகணும் எண்டிச்சினம். கொஞ்சம் தூரம் எண்டாலும் பைக்கில போறதால சந்தோசமா இருந்திச்சு. காலேல அந்த குளிர் காத்து முகத்தில் பட ஏதோ நம்மூரு ஞாபகம் வரும். அப்பிடியே நாட்கள் பிசியா போக தொடங்கிச்சு. கொலிஜ் பக்கமே போறேல்ல. எல்லாம் பார்மசியோட தான். பார்மசி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. கூட வேலை செய்யிறவையும் நல்ல மாதிரி எண்டதால சந்தோசமா போய்க்கொண்டு இருந்திச்சு. இங்க பார்மசில டச்சில தான் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுறது சிலவேளை வெளிநாட்டுக்காரர் வந்து பாதி டச்சை கடிச்சு துப்பினா இங்கிலிசில கதைக்குறது. என்னோட ஆசை நம்ம தமிழில் பேசி ஹெல்ப் பண்ணணும் எண்டு. குறைஞ்சது ஒராளுக்காவது தமிழில ஹெல்ப் பண்ணணும். இதை என்னோட வேலை செய்யிறவைக்கும் சொல்லி வைச்சிருந்தேன். அவையும் உன்னோட ஆசை நிறைவேறும் கவலைப்படாத எண்டு சொல்லுவினம்.

ஒரு நாள் ஏதோ வேலையா கணணியோட மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தன். இந்த கணணி இப்பிடித்தான் எப்பவும். சரியே இல்லை. எதையும் விரைவா செய்யாது. ஆனா சனம் எல்லாத்துக்கும் அறக்க பறக்க எண்டு நிக்குங்கள். அதனால எனக்கு டென்சனும் ஆயிடும். ஆக்களின் அவசரத்துக்கு நான் வேலை செய்ய போய் மருந்தை மாத்தி குடுத்தா சரி..ஜெயில் தான்! அண்டைக்கும் அப்பிடித்தான்..டென்சனா இருக்க என்னோட வேலை செய்யிறவா வந்து சிரிச்சுக்கொண்டு நிண்டா பக்கத்தில. எனக்கு எரிச்சலா வந்திச்சு. நான் கஷ்டப்படுறன் இவாக்கென்ன இளிப்பு எண்டு.
ஆனா அவா சிரிச்சபடியே நிண்டு கொண்டு " உங்கட ஆசை நிறைவேற போகுது" எண்டு வேற சொன்னா. நான் " இருங்கோ வாறன்" எண்டு அந்த வேலையை முடிச்சிட்டு வர. " உங்கட நாட்டு ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு ஆஸ்துமா. அதுக்கு பாவிக்கிற ஸ்பிறேயை எப்பிடி பாவிக்குற எண்டு டச்சில சொல்ல விளங்கல. நீங்களே வந்து உங்கட மொழியில விளங்கப்படுத்துங்கோ" எண்டா. நமக்கு சொல்லணுமா. சந்தோசத்தில அவர் தனியா இருந்த ரூமுக்குள்ள துள்ளாத குறையா போன நான் அப்பிடியே நிண்டுட்டன். அங்க கையில ஸ்பிறேயோட நிண்டவர் அதே ஆண்டி!!!
" யேசுவே..........இப்பிடி பழி வாங்கிட்டீரே!!" எண்டு நினைச்சுக்கொண்டு நிக்க.
" உம்மட ஆசை நிறைவேற போகுது" எண்டு எனக்கு சொல்லிட்டு அந்த ஆண்டியை பார்த்து " இவா உங்கட நாடு. தங்கட மொழியில விளக்கம் கொடுக்க வேணுமெண்டு ரொம்ப நாள் ஆசை இவாக்கு" எண்டு சொல்ல எனக்கு சளார் எண்டு அடிச்சது போல இருந்திச்சு.
ஆக்கள் குறைவெண்டதால நான் எப்பிடி விளங்கப்படுத்த போறன், எங்கட மொழி எப்பிடி இருக்கும் எண்டு கேட்க முதலாளி உட்பட எல்லாரும் அமைதியா நிண்டிச்சினம். நானும் சரியெண்டு அதிர்ச்சியை மறைச்சுக்கொண்டு
" வணக்கம் ஆண்டி" எண்டு மெதுவா சிரிச்சன்.
ஆண்டியும் " வணக்கம் " எண்டா சிரிக்காமல்..
நான் வேறு கதைக்காமல் எப்படி பாவிப்பதென்று தமிழில விளங்கப்படுத்தினன்.
எப்போதும் போல விளங்கப்படுத்திய பிறகு " ஏதும் கேள்வி/ சந்தேகம் இருக்கா?" எண்டு தயக்கமா கேட்டன். ஆண்டி உடனே " அண்டைக்கு ஏன் பொய் சொன்னீர்? " எண்டு கேட்டா. ஆஸ்துமாவுக்கு பாவிக்கும் மருந்துக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை தான். ஆனாலும் ஆண்டியோட ஆவல் எனக்கு விளங்கிச்சு. ஆனால் என்னோட நிலமை அவாக்கு புரியுமா என்ன?
" இல்லை நான் வேணுமெண்டு சொல்லவில்லை. உங்கட அங்கிள் (அவாவின் ஹஸ்பண்டை தான் அப்படி சொன்னேன்) அப்பாவிடம் சொல்லி விடுவாரோ எண்டு தான் சொன்னேன்" எண்டு பாதி உண்மையை சொனனன்.
சொல்லி விட்டு எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி அதுக்குரிய பெட்டிக்குள் வைத்து, மீதி மருந்துகளை பார்மசி பைக்குள் போட்டு எடுத்து " இந்தாங்கோ ஆண்டி" எண்டு நீட்டினன். நான் என்ன செய்றன் எண்டு அப்பிடியே பார்த்துக்கொண்டு நிண்ட ஆண்டி நீட்டிய பையை வாங்கி விட்டு " சரி நான் யாருக்கும் சொல்லவில்லை அவரும் சொல்ல மாட்டார். நானும் உம்மட வயசை கடந்து தான் வந்தனான். நீர் பயப்பிடாதையும். இனி இதுதான் எண்ட பார்மசி. அடிக்கடி சந்திப்பன். உம்மட ஆசையும் அடிக்கடி நிறைவேறும். விளங்கப்படுத்தினதுக்கு நன்றி. அதுசரி என்னை எதுக்கு ஆண்டி எண்டுறீர்..அப்பிடி கிழவியாவா இருக்கன்? அக்கா எண்டு சொல்லும் என்ன.. சரி வாறன்" எண்டு எனக்கும் மற்றவையை பாத்து " எனக்கு விளங்கிட்டுது. பாய்" எண்டு சொல்லிட்டு போனா.

நான் என்ன செய்றது, என்ன நடந்தது எண்டு தெரியாம அவா போறதையே பார்த்துக்கொண்டு நிண்டன். கண்ணில கொஞ்சமா தண்ணி வேற. அது குற்ற உணர்வாலயும் என்னோட ஆசை நிறைவேறும் போது அதை சந்தோசமா செய்ய முடியலையே என்ற கவலையாலும் வந்த கண்ணீர். பின்னால கை தட்டுற சத்தம் கேட்டு திரும்பினன். விசயம் தெரியாமல் எல்லாரும் சிரிச்சுக்கொண்டு கை தட்டிச்சினம். நானும் இவ்ளோ நாளும் மனசுக்க உறுத்தின அந்த சின்ன விசயம் இண்டைக்கு இல்லாம போயிடுச்சு எண்ட சந்தோசத்தில திரும்பவும் அந்த கணணியோட மல்லு கட்ட தொடங்கினன்.